பயணம் - ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒரு செயல்.
சாலை வழி பயணம் / சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். நம் அன்றாட வாழ்வில் இருந்து ஒரு இடைவேளை எடுத்து இவ்வாறு செல்லும் பயணம் மகிழ்ச்சியாக அமைய ஏராளமான திட்டமிடுகிறோம்.
இவ்வாறான பயணத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது பொது போக்குவரத்து. சாதாரண உள்ளூர் பேருந்து தொடங்கி ஆடம்பரமான சொகுசு பேருந்துகள் வரை ஏதேனும் ஒன்றில் நாம் பயணிக்கிறோம். அவ்வாறான ஒரு பேருந்து பயணத்தை பற்றி தான் இப்பதிவு.
கோவையில் இருந்து மூணார் செல்லும் புதிய அரசு பேருந்து அது. 7 மணி நேரப் பயணம். அனுபவம் மிகுந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர். சுமார் நான்கைந்து வருடங்களாக இருவரும் ஒரே தடத்தில் பணி புரிகின்றனர். உடன் பிறந்த சகோதரர்களையும் மிஞ்சும் வகையில் ஒருவர் மீது ஒருவருக்கு பாசம்.
தாங்கள் இருவரும் மக்களுக்கு நேரடியாக தங்கள் சேவைகளை வழங்குவதாக எண்ணுகிறார்கள். இருவரும் தன் அலைபேசியை ஓட்டுநர் அருகில் உள்ள பெட்டியில் போட்டுக் கொள்கிறார்கள். பயணத்தின் போது அலைபேசியை பயன்படுத்துவதில்லை. பொது போக்குவரத்து என்பதை உணர்ந்து அவர்கள், பேருந்தில் குப்பைகள் இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
அருமையாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர். தேவை இல்லாமல் ஒலி எழுப்புவதில்லை. வேகமாக சென்றாலும் தாறுமாறாக இயங்குவதில்லை. பேருந்து நிலையத்திற்கு குறித்த நேரத்தையும் விட 5 நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுகிறார்கள்.
அனைவரிடமும் அன்பாக பழகும் நடத்துநர்க்கு கனிவாக பேசும் குணம். புதிதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பேருந்து கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரின் பெருமையை கூறும் குணம்.
சில்லறைக்காக தரக்குறைவாக பேசும் நடத்துநர்கள் மத்தியில் ஓர் நல்ல மனிதரையும், போட்டிக்காக தாறுமாறாக விபத்து ஏற்படும் வகையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் மத்தியில் ஓர் நல்ல மனிதரையும் சந்தித்து அவர்களுடன் பயணித்தது மனநிறைவாக இருந்தது.
சமீபத்திய சம்பவம் (பேருந்தை தரக்குறைவாக இயக்கிய ஓட்டுநரை கேள்வி கேட்ட பயணியை தாக்கிய சம்பவம்) இவர்களின் நினைவலைகளை கிளறியது. இவ்வாறான நல்ல மனிதர்கள் நல்ல நினைவலைகளை நமக்கு விட்டுச் செல்கிறார்கள்.
நன்றி
அருமை நட்பு
ReplyDelete