அம்புலியும் உறங்க செல்லும் ஓர் நிசப்தமான இரவுப் பொழுதில், உறங்க மறுத்து அழ ஆரம்பித்தாள் அந்த சுட்டி குழந்தை. செய்வதறியாது மகளை தன் தோளில் போட்டுக் கொண்டு வீட்டினுள் அங்கும் இங்கும் நடந்த தந்தை தனக்கு தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார். பலன் இல்லை!
அன்று இரவு உருண்டோடியது. அடுத்த நாள் மாலையிலேயே தந்தைக்கு சிறிய சஞ்சலம் துவங்கியது. இன்றிரவை எவ்வாறு கழிப்பது என்று! குழந்தையின் அழுகை அவர் மனதில் கனத்தை ஏற்படுத்தியது.
தன்னுடைய எண்ண அலைகளை அசைபோட்டுக் கொண்டே வாகனத்தை இயக்கி வீட்டை அடைந்த அவருக்கு, தன் பாட்டி கூறிய காவியக் கதைகள் நினைவிற்கு வந்தது. இன்றிரவு எப்படியும் இக்கதைகளை கூறி குழந்தையை உறங்க வைத்து விடலாம் என்று நிம்மதியாக இருந்தார்.
இரவும் வந்தது, தான் கேட்ட கதைகளை பகிரவும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிறு பிள்ளையாகவே மாறி கதையை கூற ஆரம்பித்த தந்தைக்கு அதிர்ச்சி. "2k Kids" தலைமுறையான அச்சிறுமிக்கு காவியங்கள் புரியவில்லை. "சின்சாங், சோட்டா பீம்" என்று பார்க்கும் அக்குழந்தைக்கு "ஒரு ஊரில் ஒரு அரசர், ஒரு ஊரில் ஒரு பாட்டி" போன்ற கதைகள் சுவாரசியமாக இல்லை.
சுவாரசியம் - இதல்லவா தேடலின் திறவுகோல்.
செய்வதறியாது பொழுதை கழித்த அவர், அடுத்த நாள் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். அவருக்கு புதிய வழி பிறந்தது. இரவுக்காக காத்திருந்து, கதையை ஆரம்பித்தார்.
அதே காவியங்கள் தான் ஆனால் இம்முறை சிறுமியை கதையில் ஓர் கதாபாத்திரமாக வடிவமைத்தார். சிறிய சுவாரசியங்களை சேர்த்தார். அதன்படி ஒரு இடத்தில் இளவரசி நன்கு உறங்கினால், காலையில் துயில் கொள்ளும் போது மழை சாரல் முகத்தில் படும் என்று கூறினார்.
தன்னை இளவரசியாக எண்ணிய குழந்தை, தானும் நன்கு உறங்கினால் காலையில் மழை சாரல் முகத்தில் படும் என்று யோசித்துக் கொண்டே உறங்கினால். காலையில் தந்தை கொஞ்சம் நீர் துளிகளை சாரல் போல முகத்தில் தெளிக்க முழுவதும் இளவரசியானால் அச்சிறுமி.
தினமும் இரவு கதை சொல்ல நேரம் ஒதுக்கி தந்தை தன்னுடைய பாட்டி கூறிய எல்லா கதைகளையும் சுவாரசியமாக கூறினார். வீட்டில் மகிழ்ச்சி பரவியது.
அந்த காலகட்டத்தில் நம் பாட்டி தாத்தா மிகவும் எளிமையான முறையில் நம்மை பார்த்துக் கொண்டனர். நம்மில் பலர் நீதி கதைகள், அரசர்களின் கதைகள், நன்நெறி கதைகள் எல்லாம் தெரிந்து கொண்டது இவ்வாறு தான். நம்மில் எத்தனை பேர் அந்த நேரத்திற்காக காத்திருந்திருக்கிறோம்.
ஆனால் இன்று நாமும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி, நம் பிள்ளைகளையும் அடிமைகளாக மாற்றுகிறோம். பிள்ளைகளை சாப்பிட வைக்க அலைபேசி, உறங்க வைக்க அலைபேசி என்று நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களையும் மறந்து விடுகிறோம்.
அந்த காலகட்டத்தில் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தம் உள்ளது. இக்கதைகள் நம்மில் நிறைய கற்பனை சக்தியை உருவாக்கும். நம்மை நெறி உள்ளவர்களாக மாற்றும்.
உறவுகளை போற்றுவோம்! மகிழ்ச்சியை பகிர்வோம்!
நாம் மறந்துவிட்ட இச்செயலை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த திரு ஸ்ரீராமன் அவர்களுக்கு நன்றி. ஒரு தந்தையாக நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.
Comments
Post a Comment
Please do share your suggestions and feedback.